about_phone-29bef0

தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம்
மதுரை

ஆயிர வைசியர்களின் கோத்திரப் பெயர்கள

மாநில தலைவரின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆயிரவர் அனைவருக்கும் வணக்கம். எனது அருமைத் தந்தை ‘கல்விக்கடல்’ தெய்வத்திரு. ஏ. சண்முகசுந்தரம் – திருமதி. அன்னபூரணி அம்மாள், எனது மாமனார் ‘திருக்குறள் செம்மல்’ தெய்வத்திரு. ந. மணிமொழியனார் – திருமதி. கமலாதேவி ஆகியோரின் நல்லாசிகளோடும், நமது சமுதாயம் சிறக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நல்லோர்களின் வாழ்த்துகளோடும், தமிழ்நாடு ஆயிர வைசிய சங்கத்தின் தலைவர் பதவியினை ஏற்றுள்ளேன். ‘ஹேவிளம்பி’ தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். சமுதாயப் பெரியோர்கள், இளைஞர்கள், மாதர்கள் மற்றும் ஏனைய நல விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் பணியாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு நாடும் சிறப்பான உயரிய நிலைதனை அடைய, கலை, காவியங்கள், பண்பாடு, கல்வி, இலக்கியம், சமுதாய ஒற்றுமை ஆகியவை மேன்மை பெற வேண்டும். இவை ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் துளிர்க்கின்றன. எந்த ஒரு சமூகம், இவற்றை மேலோங்கச் செய்கிறதோ, அந்த ஒரு சமூகம் அந்த மாநிலத்தில் தனி முத்திரையைப் பதிக்கும். இது கண்கூடு. இதுவே நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் மேம்பாட்டிற்கும் பெருந்துணையாக இருக்கும். எனவே இந்த இனங்களில் நமது சமூகத்தினர் சிறந்து விளங்கி உறுதுணை நல்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு ஆவார்கள். அவர்களிடத்தில் இருக்கக் கூடிய நல்வழிச் சக்திகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் பாடுபட வேண்டும். மேலும், இந்த நோக்கில் நமது நாட்டின் கண்களாகச் சிறந்து பணியாற்றுவதில் – வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, பொதுவாழ்விலும் சரி – பெண்களின் தலையாய பங்கு போற்றுதற்குரியது. எனவே இச் செய்தி வாயிலாக, மகளிர் அனைவரும் மேலும் தத்தம் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஓர் சங்கம் சீரிய முறையில் செயல்பட, அதன் அடிப்படை வளம் பெற வேண்டும். இதற்கு, நமது சமூகத்தில் உலகெங்கும் பெருவாரியாகவும், சிறுவாரியாகவும் ஆங்காங்கே வசித்து வருகின்றவர்கள் ஒன்றுபட வேண்டும். அதாவது, இந்த சுமார் நாற்பது இலட்சம் ஆயிரவர்களும் நமது சங்கத்தில் அடிப்படை உறுப்பினர்களாகப் பதியப் பெற வேண்டும். இவர்களை இனங்கண்டு கொண்ட பின்னர், நமது சங்கத்தின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதற்குத் தலையாய பணி நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல் பரிமாற்றமும், ஒருங்கிணைப்பும், மக்கட் தொகைக் கணக்கெடுப்பும் ஆகும். எனவே ஒவ்வொரு அங்கத்தினரும், தத்தமக்குத் தெரிந்து ஏனைய ஆயிரவர் அனைவரையும் ஒன்று திரட்டி நமது சங்கத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது சமூகத்தில் உள்ள 18 பிரிவுகளில் 12 பிரிவுகளை மட்டுமே தற்போது அறிய முடிந்துள்ளது. எஞ்சிய அனைத்துப் பிரிவு சார்ந்த மக்களையும் நமது சங்கத்தின் ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டு வர வேண்டியதும் முக்கிய பணியாக உள்ளது. அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கலந்து, நமது சமூக மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியினை விரைவில் முடித்துத் தர, அனைவரும் உதவுங்கள். நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அடித்தட்டு ஆயிரவரின் வாழ்க்கைத்தரம், கல்வி வசதி, வேலைவாய்ப்பு ஆகியன உயர வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து ஆயிரவரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த நோக்கில், நமது பத்திரிகையின் வளர்ச்சியும் பெரும் பங்காற்றும் என உறுதியாய் நம்புகிறேன். நமது சமூகத்தினருக்கென பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளேன். நமது சமூகத்தினரின் வரலாற்றையும் பெருமையையும் ஏனையோரும் நமது இளைய சமுதாயத்தினரும் அறியும் வண்ணம் நமது சங்க இணையதளம் வரும் புத்தாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள நமது சமூகத்தினர் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ளவும், சமுதாயச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இது உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம் அன்புடன், டாக்டர். ஏ.எஸ். கணேசன் வேந்தர், விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம், சென்னை

Read More

சமுதாய மக்கள் கணக்கெடுப்பு - 2017

தமிழ்

தாங்கள் தங்கள் விவரங்களை தமிழில் சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும்
Click Here

English

Please Click here to Register Your Details in English
Click Here

Contact Us